ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடுவதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று (28) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளதனால் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், யுஸ்வேந்திர சஹால், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷன், பிரித்வி ஷா உள்ளிட்டோரும் இந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள்.
ரவிசாஸ்திரி இங்கிலாந்தில் இருப்பதால் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் செயல்பட உள்ளார்.
இந்த நிலையில், இந்திய அணியினர் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்து இந்திய வீரர்கள் இன்று (28) பிற்பகல் தனி விமானத்தில் இலங்கையை வந்தடைந்தனர்.
இதன்படி, கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மேலும் மூன்று நாட்களுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு பயிற்சியை தொடங்குவார்கள்.
இந்தியா – இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து டி-20 தொடர் ஜூலை 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இது இவ்வாறிருக்க, ஒருநாள் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் இலங்கையின் உள்ளூர் அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட பி.சி.சி.ஐ கோரியிருந்தது.
ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும், அதற்கு மாற்று ஏற்பாடாக இந்திய வீரர்களுக்கிடையில் பயிற்சி ஆட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.