இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது பணி புரிகின்ற வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை உடனடியாக நீக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாட்டு பயிற்சியாளர்கள் அணியில் இருப்பதும் இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை முழுமையாக இழந்தது.
இந்த தொடரில் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணி, டி-20 போட்டிகளில் தமது ஐந்தாவது தொடர் தோல்வியினை பதிவு செய்த நிலையில், இந்த தோல்விக்காக இலங்கை கிரிக்கெட் அணி மீது கடும் விமர்சனங்களும் எழுந்திருந்தன.
அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், இலங்கை அணியின் தொடர் தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான திலகரட்ன டில்ஷான் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் மிகவும் திறமையான பயிற்சியாளர்கள் உள்ளனர். வேண்டுமானால் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை மாத்திரம் தலைமைப் பயிற்சியாளராக நியமித்துக் கொள்ளுங்கள். மற்றைய அனைவரையும் உள்ளூர் பயிற்சியாளர்களாக நியமியுங்கள்.
உள்ளூர் பயிற்சியாளர்களுடன் கடமையாற்றித் தான் இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வென்றது. தற்போது அணியில் 99 சதவீதமானவர்கள் வெள்ளைக்காரர்கள். எமது வீரர்களுக்கு அவர்கள் பேசுவது ஒன்றும் புரியாது.
எனவே, எமது நாட்டில் சிறந்த உள்ளூர் பயிற்சியாளர்கள் உள்ளனர். அவர்களை இலங்கை அணியின் பயிற்சியாளர் குழாத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்ஷான் தெரிவித்தார்.
அதேபோல், அணியில் உள்ள அஞ்சலோ மெதியூஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்ன போன்ற வீரர்களை அணியில் வைத்திருக்க வேண்டும். அவர்களுடன் விளையாடுவதற்கான வாய்ப்பை இளம் வீரர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நிறைய விடயங்களை கற்றுக் கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டார்.