November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்தில் இரவில் சுற்றித் திரிந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களை நாட்டிற்கு திருப்பி அழைக்க நடவடிக்கை

வீரர்களுக்கான பாதுகாப்பு வளையத்தை மீறிய குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை இங்கிலாந்தில் இருந்து நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

குறித்த இரண்டு வீரர்களும் இங்கிலாந்தில் பாதுகாப்பற்ற விதத்தில் வீதியில் சுற்றும் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, இருவரையும் நாட்டுக்கு திருப்பி அழைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அணி முகாமையாளரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன், குறித்த இரண்டு வீரர்களுக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றது.

முன்னதாக நடைபெற்ற டி-20 தொடரை 3க்கு 0 என இலங்கை அணி முழுமையாக இங்கிலாந்து அணியிடம் பறிகொடுத்தது.

இந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கிலாந்தின் டர்ஹம் வீதியில் உலாவிய காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து டி-20 போட்டிகளிலும் தோல்வியுற்றிருக்கும் நேரத்தில் கிரிக்கெட் வீரர்களின் இந்த நடத்தை தொடர்பில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கபட்டு வருகிறது.

அதேபோல, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தத் தொடர் நடைபெறுவதால் வீரர்கள் அனைவரும் ‘பயோ பபுள்’ எனப்படுகின்ற பாதுகாப்பு உயிர்க்குமிழியின் கீழ் உள்ளார்கள்.

எனவே, முகாமையாளரின் அனுமதியின்றி எவ்வாறு இந்த இரண்டு வீரர்களும் இரவு நேரத்தில் ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்கள் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.

குறித்த இருவரும் உயிர்குமிழி விதிமுறைகளை மீறி செயற்பட்டமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், அவர்கள் இருவருக்கும் எதிரான மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை அடுத்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.