
இவ்வருடம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கு ஐ.சி.சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த டி-20 உலகக் கிண்ணம் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கு பதில் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்த டி-20 உலகக் கிண்ணத்தை நடத்த ஐ.சி.சி முடிவு செய்தது.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்வதால் கடந்த மார்ச் மாதம் ஆரம்பமாகிய ஐ.பி.எல் டி-20 தொடரும் இடை நிறுத்தப்பட்டு, எஞ்சியுள்ள போட்டிகளை செப்டம்பர் -அக்டோபரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் டி-20 உலகக் கிண்ணத்தை நடத்துவது குறித்து இம்மாதம் 28 ஆம் திகதிக்குள் தெரிவிக்கும்படி ஐ.சி.சி அறிவுறுத்தி இருந்தது.
எனவே அதற்கான கெடு நாளை (28) முடிவடையும் நிலையில், உலகக் கிண்ணத்தை வேறொரு நாட்டில் நடத்த தங்களுக்கு தடையில்லை என்று பி.சி.சி.ஐ தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.
எனவே, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த ஆண்டு டி-20 உலகக் கிண்ணத் தொடர் பெரும்பாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி-20 உலகக் கிண்ணத்தை நடத்துவதற்குரிய முதற் கட்ட பணிகளை ஐ.சி.சி தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, டி-20 உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும், நவம்பர் 14 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் டி-20 உலகக் கிண்ணத்தின் தகுதிச் சுற்று போட்டிகள் அனைத்தும் ஓமானில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகள் ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன் பிறகு இறுதி 12 அணிகள் பங்கு பற்றும் பிரதான சுற்று லீக் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படவுள்ளது. இதற்காக அங்குள்ள ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபாய் ஆகிய 3 மைதானங்களும் தயார்படுத்தப்படவுள்ளன.
எது எவ்வாறாயினும், இது குறித்த இறுதி முடிவு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.