இலங்கையின் ஜூடோ நட்சத்திரமான சாமர நுவன் தர்மவர்தன 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
இதன்படி, இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட ஐந்தாவது இலங்கை வீரராக இவர் இடம்பிடித்தார்.
தேசிய ஜூடோ சம்பியனான சாமர நுவன், 2016 றியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
இதன்மூலம் இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் பங்குபற்றிய முதல் ஜூடோ வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார்.
இதனிடையே, குறித்த போட்டியில் சாமர நுவன் இறுதி 16 பேர் சுற்றுக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை விமானப்படை அணிக்காக விளையாடி வருகின்ற இவர், இறுதியாக 2019 இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அதேபோல், 2018 இல் நடைபெற்ற ஐரோப்பிய ஜூடோ சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சாமர நுவன் உள்ளடங்கலாக ஐந்து வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
குதிரைச் சவாரி வீராங்கனை மெதில்டா கார்ல்சன், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை, டெஹானி எகொடவெல மற்றும் பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்ன ஆகியோரோ இவ்வாறு தகுதி பெற்றுக் கொண்டனர்.
இதனிடையே, நீச்சல் வீரர்கள் இருவருக்கும், மெய்வல்லுனர் வீரர்கள் இருவருக்கும் இம்முறை ஒலிம்பிக் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.