
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் நட்சத்திரமான ரங்கன ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி ஜிம்பாப்வே அணியுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் இருந்து, ஹேரத் தனது சேவையினை பங்களாதேஷ் அணிக்கு வழங்கவுள்ளார்.
இதேநேரம், ரங்கன ஹேரத் இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணம் வரையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு பொறுப்பாக இருக்கும் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் வெற்றிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்ற ரங்கன ஹேரத், இலங்கை அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், ரங்கன ஹேரத்தின் நியமனம் தவிர பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக தென்னாபிரிக்காவின் அஷ்வெல் பிரின்ஸின் நியமனம் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.