Photo: England Cricket Twitter
இலங்கைக்கு எதிரான 3 ஆவது டி-20 போட்டியில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3–0 என டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு டி-20 போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று (26)நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் குசல் பெரேரா,முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை குவித்தது.
ஜொனி பெயார்ஸ்டோவும் டாவிட் மலானும் அரைச் சதங்கள் குவித்ததுடன், முதல் விக்கெட்டுக்காக 70 பந்துகளில் 105 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
இதில் ஜொனி பெயார்ஸ்டோவ் 43 பந்துகளில் 51 ஓட்டங்களையும், டாவிட் மலான் 48 பந்துகளில் 76 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் துஷ்மன்த சமீர மிகத் திறமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் துஷ்மன்த சமீர பதிவு செய்த அதி சிறந்த பந்து வீச்சு பெறுதி இதுவாகும்.
அதேபோல, இளம் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ 4 ஓவர்கள் பந்துவீசி 26 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சால் இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வி அடைந்தது.
மிகவும் மோசமாக செயல்பட்ட இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில், பின்வரிசை வீரரான பினுர பெர்னாண்டோ மாத்திரமே 20 ஓட்டங்களை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, டி-20 போட்டிகளில் இலங்கை அணி பதிவு செய்த நான்காவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
அதுமாத்திரமன்றி, சர்வதேச டி-20 அரங்கில் 5 ஆவது நேரடியான தொடர் தோல்வியை இலங்கை அணி பதிவு செய்தது.
இதன்படி, 89 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3 – 0 என்ற ஆட்ட கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் டேவிட் வில்லி 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சாம் கரன் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் டாவிட் மலானும், தொடர் நாயகனாக சாம் கரனும் தெரிவாகினர்.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி செஸ்டர்-லே-ஸ்ரிட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.