(Photo: BCCI/IPL)
ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஒன்பதாவது ஆட்டத்தில் இன்று ஸ்ரேயாஸ் ஐயரின் டெல்லி கெபிடெல்ஸ் அணியை சார்ஜாவில் எதிர்கொள்கின்றது.
முதல் கட்ட ஆட்டத்தில் டெல்லியிடம் தோல்வியடைந்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை அணி இன்று விளையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி 8 ஆட்டங்களில் 3 வெற்றி, 5 தோல்விகளுடனும், டெல்லி அணி 8 ஆட்டங்களில் 5 வெற்றி, 3 தோல்விகளுடனும் இந்த ஆட்டத்தை எதிரகொள்கின்றன.
புள்ளிகள் பட்டியலில் டெல்லி இரண்டாமிடத்திலும், சென்னை ஆறாமிடத்திலும் உள்ளன.
ஷேன் வொட்ஸன், பெப் டு பிலெசி, ஷாம் கரன் ஆகியோர் சென்னை அணியின் முன்வரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்துகின்றனர்.
மத்திய வரிசையில் அம்பாட்டி ராயுடு, அணித்தலைவர் தோனி, ரவிந்ர ஜடெஜா, டுவேன் பிராவோ ஆகியோர் இருக்கின்றமை சென்னை அணியின் துடுப்பாட்டத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது.
டுவேன் பிராவோ இதுவரை துடுப்பாட்டத்தில் பெரிதாகப் பிரகாசிக்காததால் இன்று அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த வீரர்களில் ஒரு சிலர் திறமையாக செயற்பட்டாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கை எகிறிவிடும்.
அதேபோன்று ஏழு பந்துவீச்சாளர்களைக் கொண்ட அணியாகவும் சென்னை மிளிர்கின்றது. தீபக் சகார், ஷர்துல் தாகூர், ஷாம் கரன் ஆகியோர் வேகப்பந்துவீச்சிலும், ரவிந்ர ஜடெஜா, பியூஸ் சாவ்லா, கரண் சர்மா போன்றோர் சுழல்பந்துவீச்சிலும் மிரட்டக்கூடிய வீரர்கள்.
இவர்களுடன் மிதவேகப்பந்து வீச்சாளரான டுவேன் பிராவோ கடைசி கட்ட ஓவர்களை திறமையாக வீசுகிறார். இதனால் டெல்லியை விட சற்று பலம் வாய்ந்ததாகவே சென்னை அணி தென்படுகின்றது.
அதற்காக டெல்லி அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் இதே சென்னை அணியை முதல் கட்டத்தில் 44 ஓட்டங்களால் வெற்றிகொண்டவர்கள்.
ஆனால், இன்றைய ஆட்டத்தில் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குகின்றமை சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
கடந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடற்றகுதி கவலையளிக்கும் வகையில் இருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ரிஷப் பாண்ட் வேறு உபாதை காரணமாக ஓய்வில் இருக்கிறார். இந்த இரண்டு காரணிகளும் டெல்லி அணியை உளரீதியாக பாதிப்புக்குள்ளாகும் வகையில் உள்ளன.
என்றாலும், கடந்த ஆட்டங்களில் அடுத்தடுத்து அரைச்சதங்களைக் கடந்த ஷிகர் தவான் நம்பிக்கை அளிக்கிறார். பிருத்திவ் ஷா, அஜின்கெயா ரஹானே ஆகியோரும் பொறுப்புணர்ந்து செயற்பட்டால் துடுப்பாட்டத்தில் நிலவும் குறையை தீர்த்துவிடலாம்.
மத்திய வரிசையில் அலெக்ஸ் கெரே, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரும் பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வேகப்பந்துவீச்சில் கலக்கிவரும் கெகிஷோ ரபாடா, நொர்ட்ஜி, சுழல்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷார் பட்டேல் ஆகியோர் இருக்கின்றமை டெல்லி அணிக்கு நிம்மதி அளிக்கிறது.
கடந்த ஆட்டங்களைப் போன்றே இன்றும் இவர்கள் சிறப்பாக செயற்பட்டாக வேண்டும்.
ஐ.பி.எல்லில் சென்னையும், டெல்லியும் 22 ஆட்டங்களில் மோதியுள்ளதுடன் அவற்றில் சென்னை 15 வெற்றிகளையும், டெல்லி 7 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
இரண்டாவது ஆட்டம்: பெங்களூர்- ராஜஸ்தான்
இதேவேளை, துபாயில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரண்டு அணிகளுமே தலா 8 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளதுடன் பெங்களூர் அணி 5 வெற்றிகளையும், ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளையும் பெற்ற நிலையில் இந்த ஆட்டத்தில் களமிறங்குகின்றன.