January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மோசமான துடுப்பாட்டத்தால் இரண்டாவது டி-20 போட்டியிலும் இலங்கைக்குத் தோல்வி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 தொடரின் இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து அணி டக்வெத் லூவிஸ் முறையில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2க்கு 0 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

அத்துடன், டி-20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி தொடர்ச்சியாக 5 டி-20 தொடர்களை சந்தித்து சாதனையொன்றையும் படைத்தது.

இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் இரண்டாவது போட்டி, நேற்று கார்டிப் நகரில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும், குசல் பெரேரா 21 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் மார்க் வூட் மற்றும் ஆதில் ரஷீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருக்க, சாம் கரன் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

இதையடுத்து, 112 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்வரிசை வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 36 ஓட்டங்களுக்குள்  4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், சாம் பில்லிங்ஸும், லியெம் லிவிங்ஸ்டனும் தாக்குப்பிடித்து நின்றனர். அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்துக்கு 18 ஓவர்களில் 103 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களை எடுத்தது. லிவிங்ஸ்டோன் 29 ஓட்டங்களுடனும், சாம் கரன் 16 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என டி-20 தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது லியெம் லிவிங்ஸ்டனுக்கு அளிக்கப்பட்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவதும், இறுதியுமான டி-20 போட்டி எதிர்வரும் சனிக்கிழமை சௌத்தம்ப்டன் நகரில் நடைபெறுகின்றது.