இலங்கையுடனான முதலாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
நேற்று கார்டிப்பில் நடைபெற்ற முதல் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தார்.
இதனையடுத்து முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் இருந்தே துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் காட்டியது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க, ஏனைய ஆரம்ப வீரரான தனுஷ்க குணதிலக்க வெறும் 19 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தார்.
பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் மத்திய வரிசையும், துடுப்பாட்ட தடுமாற்றத்தினைக் காட்டிய போதும் தசுன் ஷானக மாத்திரமே போராட்டத்தினை வெளிப்படுத்தினார்.
இதனால், 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் டி-20 சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது அரைச்சதத்தினைப் பெற்ற, தசுன் ஷானக 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 44 பந்துகளுக்கு 50 ஓட்டங்களைப் பெற்றிருக்க, அணித்தலைவர் குசல் பெரேரா 30 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஆதில் ரஷீட் மற்றும் சாம் கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 130 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி குறித்த வெற்றி இலக்கினை 17.2 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களுடன் அடைந்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றியினை உறுதி செய்த ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 55 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற, ஜேசன் ரோய் 36 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துஷ்மன்த சமீர மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜோஸ் பட்லர் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டி-20 போட்டி இதே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.