July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றது நியூசிலாந்து!

Photo: ICC Twitter

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி சம்பியனாகத் தெரிவாகியது.

இதன் மூலம் ஐ.சி.சி.யினால் நடத்தப்படுகின்ற உலகக் கிண்ண சம்பியன் பட்டமொன்றை நியூசிலாந்து அணி முதல் தடவையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

மழை காரணமாக இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டதால், இரண்டாம் நாளில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாட  களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் (28), ரோஹித் சர்மா (34), விராத் கோலி (44), ரஹானே (49) என முன்வரிசை வீரர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை ஓரளவிற்கு வழங்கினாலும், பின்வரிசையில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 217 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கைல் ஜெமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, நீல் வாக்னர் மற்றும் டிரண்ட் போல்ட் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டெவோன் கொன்வே, டொம் லதம் ஆகிய இருவரும் முதல் விக்கெட்டுக்காக 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர்.

எனினும், தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்கள் சிறப்பாக சோபிக்கவில்லை.இறுதியில் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் (49), டிம் சவுத்தி (30) ஓரளவுக்கு தாக்கு பிடித்து ஓட்டங்களை குவித்ததால், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை எடுத்தது.

பந்து வீச்சில் மொஹமட் ஷமி 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 32 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியது.

இறுதியில் 170 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 139 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகளையும், ட்ரண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும், நீல் வாக்னர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள், டெவோன் கான்வே, டெம் லதம் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணியின் பக்கம் ஆட்டம் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் அனுபவ ஆட்டக்காரர் ரொஸ் டெய்லர் ஆகியோர் நிதானமாக ஆடி நியூசிலாந்து அணியை வெற்றி பெற செய்தனர்.

வில்லியம்சன் 52 ஓட்டங்களையும், ரொஸ் டெய்லர் 47 ஓட்டங்களையும் எடுத்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

இதன்மூலம், முதல் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் சம்பியன் மகுடத்தை நியூசிலாந்து அணி முதன் முறையாக  கைப்பற்றியது.

அத்துடன், ஐ.சி.சி நடத்திய போட்டி தொடரொன்றில் நியூசிலாந்து அணி வெல்லும் முதல் பட்டமும் இதுவாகும்.

முன்னதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.சி.சி ஒருநாள் உலக  கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை  தழுவியது.

இந்த நிலையில், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதுக்கு நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் தெரிவானார்.