July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அங்குரார்ப்பண லங்கா பிரீமியர் லீக் தொடரை 557 மில்லியன் பேர் பார்த்து சாதனை

கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் டி-20 (LPL) தொடரை உலகம் பூராகவும் 557 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற அங்குரார்ப்பண லங்கா பிரீமியர் லீக் தொடர் மாபெரும் வெற்றி பெற்றது.

இதில் அந்தத் தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரிய அளவில் வருமானம் ஈட்டி இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அத்துடன், லங்கா பிரீமியர் லீக் தொடரை உலகம் பூராகவும் பார்த்த மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 557 மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports), சொனி ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் (Sony Sports Network), ஜியோ (Geo), பிடிவி (PTV) மற்றும் வில்லோ டிவி (Willow TV) உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, கனடா, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இதன்படி, லங்கா பிரீமியர் லீக் தொடரை தொலைக்காட்சி வாயிலாக 155 மில்லியன் பேரும், You Tube உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக 218 மில்லியன் பேரும் பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இணையவழி ஊடகங்கள் வாயிலாக 184 மில்லியன் பேர் லங்கா பிரீமியர் லீக் தொடரை பார்த்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அத்தியாயம் எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.