July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.சி.சி.யின் 3 உலகக் கிண்ணத் தொடர்களை நடத்தும் வாய்ப்பைப் பெற இலங்கை முடிவு!

Photo: ICC Twitter

2024 முதல் 2031 வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ள ஐ.சி.சி.யின் இரண்டு உலகக் கிண்ணம் உள்ளிட்ட மூன்று முக்கிய கிரிக்கெட் தொடர்களை வரவேற்பு நாடாக முன் நின்று நடத்துவதற்கான உரிமையை கோருவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக சபைத் தேர்தல் அண்மையில் நடைபெற்றதுடன், இதில் ஷம்மி சில்வா தலைமையிலான குழு அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையின் முதலாவது நிறைவேற்றுக் குழு கூட்டம் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது,  2031 வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ள ஐ.சி.சியின் முக்கிய தொடர்களை நடத்துவது, வீரர்களுக்கான ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வது, உள்ளூர் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ஐ.சி.சி) 2024 இல் இருந்து அடுத்த 8 ஆண்டுகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணையில் ஒருநாள் உலகக் கிண்ணம், டி-20 உலகக் கிண்ணம் மற்றும் சம்பியன்ஸ் கிண்ணம் உள்ளிட்ட மூன்று முக்கிய போட்டித் தொடர்களை இலங்கையில் நடத்துவதற்கு உரிமை கோருவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் டி-20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை இன்னும் சில ஆசிய நாடுகளுடன் சேர்ந்து கூட்டாக நடத்துவது தொடர்பிலும் இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இறுதியாக, கடந்த 2012 இல் ஐ.சி.சி.யின் டி-20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் இலங்கையில் நடைபெற்றது.

அதற்கு முன்னதாக 2011 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் ஐ.சி.சி.யின் ஒருநாள் உலகக் கிண்ணமும், 2002 ஐ.சி.சி.யின் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரும் இலங்கையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.