October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொல்கத்தாவை பந்தாடியது மும்பை!

Photo:BCCI/IPL

இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் தலைவராக இயன் மோர்கன் செயற்பட்டார். அணித் தலைவரான தினேஸ் கார்த்திக் தனது பொறுப்பை துறந்தமையே அதற்குக் காரணமாகும்.

துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இந்தத் தீர்மானத்தை தாம் எடுத்ததாகவும், அணித்தலைவராக இயன் மோர்கனை நியமிக்குமாறும் தினேஸ் கார்த்திக் கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய இயன் மோர்கன் தலைமையில் களமிறங்கிய கொல்கத்தா அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. எனினும், புதிய தலைமையிலும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ராகுல் திரிபாத்தி, நித்திஸ் ராணா, தினேஸ் கார்த்திக், ஆன்ட்ரே ரஸல் என முக்கிய வீரர்கள் சகலரும் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் மாத்திரம் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

Photo:BCCI/IPL

கொல்கத்தா அணி 10.4 ஓவர்களில் 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அணித்தலைவர் இயன் மோர்கன் மற்றும் பெட் கமின்ஸ் ஜோடி 56 பந்துகளில் 87 ஓட்டங்களை அபாரமாகப் பகிர்ந்து அணியை தலைநிமிர வைத்தது.

இந்த இருவரையும் மும்பை பந்துவீச்சாளர்களால் இறுதிவரை ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை.

இயன் மோர்கன் 2 சிக்ஸர்களுடன் 39 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். பந்துவீச்சாளரான பெட் கமின்ஸ் தனது சக்திக்கு மீறி 36 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 53 ஓட்டங்களை விளாசி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களைப் பெற்றது.

ராகுல் சகார் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரிட் பும்ரா, கோல்டர் நெய்ல், ட்ரென்ட் பௌல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலகுவான இலக்கான 149 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய மும்பை அணிக்கு தலைவர் ரோஹித் சர்மா மற்றும் குவின்டன் டி கொக் ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.

இவர்கள் முதல் விக்கெட்டுக்காக 10.3 ஓவர்களில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ரோஹித் சர்மா ஒரு சிக்ஸருடன் 35 ஓட்டங்களைப் பெற்றார்.

Photo:BCCI/IPL

ஆனாலும், மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குவின்டன் டி அதிரடியாக அரைச்சதம் கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகளுடன் 78 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

சூர்யகுமார் யாதவ் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், ஹர்திக் பாண்ட்யா 21 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இது இவ்வருடத் தொடரில் மும்பை அணி பெற்ற ஆறாவது வெற்றி என்பதுடன் 12 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது.

கொல்கத்தா அணி 8 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தில் உள்ளது.