July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை அணியின் அடுத்த அஞ்சலோ மெதியூஸாக தனன்ஜய லக்‌ஷான் இடம்பிடிப்பார்’;லசித் மாலிங்க எதிர்வுகூறல்

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரர் தனன்ஜய லக்‌ஷான், 2023 ஆம் ஆண்டுக்குள் இலங்கை அணியின் இன்றியமையாத வீரராக இருப்பார் என நட்சத்திர வீரர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல, 2023 ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளுக்கு சிறந்த முதலீடாகவும், அடுத்த அஞ்சலோ மெதியூஸாகவும் அவர் இருப்பார் என மாலிங்க குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ YouTube வலைத்தளத்தில் தனன்ஜய லக்‌ஷான் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அணியில் தற்போது வலதுகை துடுப்பாட்ட வீரர்களுக்குள் ஸ்விங் செய்து நேர்த்தியாக பந்து வீசுகின்ற ஒரேயொரு பந்துவீச்சாளராக தனன்ஜய லக்‌ஷான் விளங்குகிறார். பந்தை ஸ்விங் மற்றும் புதிய பந்தில் வேகத்தை கட்டுப்படுத்துதல் ஆகிய கலவையான ஒரு பந்துவீச்சு நுட்பம் அவரிடம் உண்டு.

இதனால், போட்டியின் கடைசி ஓவரில் அவரது சேவை இலங்கை அணிக்கு மிகப் பெரிய நன்மையை கொடுக்கும் என மாலிங்க தெரிவித்தார்.

இருப்பினும், மத்திய ஓவர்களில் விக்கெட் எடுக்க முயற்சிக்காமலும், ஓட்டங்களை விட்டுக் கொடுக்காமலும் இன்னிங்ஸின் நடுவில் அவர் எப்படி பந்து வீசுகிறார் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் மாலிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

எனவே, தனன்ஜய லக்‌ஷான் புதிய பந்தில் அதிக திறமைகளை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்த மாலிங்க, அவரை அணிக்கு அழைக்கும் போது அதில் கவனம் செலுத்தி, புதிய பந்தை கொண்டு பந்து வீசுவதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்குவது அவசியம் என்றும் மாலிங்க கூறினார்.

எனவே, 2023 உலகக் கிண்ணத்தை குறிவைத்து தேர்வுக் குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் என்பன அவரை இலங்கை அணியில் இணைத்து கொண்டுள்ளமை ஒரு நல்ல முதலீடு என்று நான் நினைக்கிறேன்.

எனது நம்பிக்கை என்னவென்றால், 2023 ஆம் ஆண்டிற்குள் இலங்கை அணியால் தவிர்க்க முடியாத ஒரு வீரராக தனன்ஜய லக்‌ஷான் இருப்பார் என்று லசித் மாலிங்க தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளதுடன், இலங்கை அணியில் தனன்ஜய லக்‌ஷானும் இடம்பிடித்துள்ளார்.

இதனிடையே, காயம் காரணமாக 16, 18 ஆகிய திகதிகளில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இருப்பினும், அவர் இப்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், அவருக்கு இங்கிலாந்து அணியுடனான தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.