இந்தியாவின் முன்னாள் நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் 91 ஆவது வயதில் காலமானார்.
கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாலேயே அவர் காலமானதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மில்கா சிங், கடந்த மாதம் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொஹாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சையில் முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து வீடு திரும்பிய அவருக்கு திடீரென ஒக்ஸிஜன் அளவு குறைந்ததை அடுத்து சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.
‘பறக்கும் சீக்கியர்’ என புகழ்பெற்ற மில்கா சிங், ஆசிய விளையாட்டு விழாவில் 4 தங்க பதக்கங்களை வென்றிருந்தார்.
டோக்கியோ 1958 ஆசிய விளையாட்டு விழாவில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளிலும், 1962 ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் 400 மீட்டர் மற்றும் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியிலும் மில்கா சிங் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.
அத்துடன், ரோம் 1960 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 400 மீட்டர் இறுதிப் போட்டியில் 4 ஆம் இடத்தை பெற்றார்.
இது இவ்வாறிருக்க, மில்கா சிங்கின் மெய்வல்லுநர் வாழ்க்கை பொலிவூட் திரை உலகில் 2013 இல் ‘பாக் மில்கா பாக்’ (ஓடு மில்கா ஓடு) என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, மில்கா சிங்கின் மனைவி, இந்தியாவின் முன்னாள் கரப்பந்தாட்ட அணித் தலைவியான நிர்மல் கோரும் இந்த வார முற்பகுதியில் கொரோனா பாதிப்பால் மரணமானார். இறக்கும்போது அவருக்கு வயது 85 ஆகும்.
எனவே, இந்தியாவின் தடகள வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக விளங்கிய மில்கா சிங் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர், பிரதமர், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.