வீரர்களுக்கான வருடாந்த புதிய ஒப்பந்தத்தில் மேலும் 50 வீரர்களை இணைத்து கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் சபையின் தொழில் நுட்ப குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநர் டொம் மூடி ஆகியோரால் முன்மொழியப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் 24 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கை வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில், கையழுத்திடுவதற்கான கால எல்லை கடந்த 6 ஆம் திகதிவரை வழங்கப்பட்டிருந்த போதும், ஒப்பந்தம் நியாயமற்றது மற்றும் வெளிப்படையானதல்ல என சுட்டிக்காட்டி வீரர்கள் கையெழுத்திட மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், வீரர்களுக்கான தரப்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டார்கள் என கிரிக்கெட் வீரர்களின் பிரதிநிதியான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக இங்கிலாந்து தொடர் நடைபெறுமா? அல்லது இலங்கை கிரிக்கெட் சபை வேறு தீர்மானங்களை அறிவிக்குமா? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், கிரிக்கெட் அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் தற்காலிக இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இதன்படி, இங்கிலாந்து தொடருக்கு செல்வதற்கான ஒப்பந்தத்தில் மாத்திரம் கையெழுத்திடுவதற்கு இலங்கை வீரர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இலங்கை அணி வீரர்கள் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க கடந்த 9 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர்.
எது எவ்வாறாயினும், இலங்கை வீரர்கள் வருடாந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதன்படி, இங்கிலாந்து தொடர் நிறைவடைந்த பின்னர், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் வீரர்கள் இணைந்து ஒப்பந்தம் தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எடுப்பார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக எந்தவொரு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இலங்கை ஏ அணி மற்றும் இலங்கை வளர்ந்து வரும் அணியில் உள்ள 50 வீரர்களையும் வருடாந்த ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் கிரிக்கெட்டையும், உள்ளூர் வீரர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.