Photo: ICC Twitter
மழை காரணமாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இன்று (18) இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஆரம்பமாகவிருந்தது.
முதல் முறையாக ஐ.சி.சி நடத்தும் டெஸ்ட் சம்பியன்ஷிப் என்பதால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணி) போட்டி ஆரம்பமாக இருந்தது.
ஆனால், சவுத்தாம்ப்டனில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் நாணய சுழற்சியைக் கூட போட முடியவில்லை.
அத்துடன், தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. இருப்பினும், 5 நாள் ஆட்டத்தை முழுமையாக நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
இறுதிப் போட்டிக்கான விதிமுறையை வெளியிட்ட ஐ.சி.சி, மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் கூடுதலாக ஒருநாள், அதாவது 6 நாட்கள் வரை போட்டிகளை நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது.
தற்போது முதல்நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டிகள் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க, நாளையும் மழை பெய்யும் என சவுத்தாம்ப்டன் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும், இன்றுபோல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் சிறிது நேரம்தான் மழை நீடிக்கும் எனவும் கூறியுள்ளது.