January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளர்: உறுதி செய்தது பி.சி.சி.ஐ

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் திட்டமிடப்பட்டிருக்கும் இலங்கை சுற்றுப் பயணத்துக்கு மற்றுமொரு அணியை இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஷிகர் தவான் தலைமையில் 3 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இத்தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலங்கை தொடரில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பி.சி.சி.ஐ.யின் தலைவர் சௌரவ் கங்குலியும் ராகுல் டிராவிட் தான் பயிற்சியாளராக செயல்படுவார் எனத் தெரிவித்திருந்தார்.

இறுதியாக 2014 இல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக ராகுல் டிராவிட் செயல்பட்டிருந்தார்.

இது இவ்வாறிருக்க, ராகுல் டிராவிட் தற்போது இந்திய கிரிக்கெட் அகடமியின் தலைமை ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை அணியுடனான தொடரில் இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக டி திலீப்பும், பந்து வீச்சுப் பயிற்சியாளராக பராஸ் மாப்ரேவும் செயல்பாடுவார்கள் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.