அமெரிக்கா கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மைனர் கிரிக்கெட் டி-20 லீக் தொடரில் இலங்கையை சேர்ந்த ஒன்பது வீரர்கள் விளையாடுவதற்கு தெரிவாகியுள்ளனர்.
அமெரிக்க கிரிக்கெட் சபை தமது உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்திருக்கும் மைனர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மைனர் லீக் கிரிக்கெட் தொடர் கொவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறவுள்ள இந்த தொடரில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் ஆறு வெவ்வேறு அணிகளை பிரதிநிதித்துவம் செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, அமெரிக்காவின் நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்குபெறும் இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கையினைச் சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.
இதில் பெரும்பாலானோர் இலங்கை தேசிய அணிக்காகவும், இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஷெஹான் ஜயசூரிய மேற்கு பிராந்தியத்தின் சிலிகோன் வேல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடவிருக்கின்றார்.
இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் உலக கிண்ண நாயகன் அர்ஜூன ரணதுங்கவின் புதல்வரான தியான் ரணதுங்கவும் மேற்கு பிராந்தியத்தின் மற்றுமொரு அணியான ஹொலிவூட் மாஸ்டர்ஸ் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விளையாடும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றார்.
இவர் 2009 மற்றும் 2010 காலப்பகுதியில் தமிழ் யூனியன் கழகத்துக்காக விளையாடியிருந்தார்.
இந்த அணியில் இலங்கையின் உள்ளுர் முதல்தர போட்டிகளில் விளையாடிய துடுப்பாட்டவீரரான செஹான் பெர்னாண்டோவும் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிழக்கு பிராந்திய அணிகளில் ஒன்றாக இருக்கும் சமர்செட் கவாலியர்ஸ் அணிக்கு விளையாடுகின்ற சந்தர்ப்பத்தினை கனடாவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்டவீரர் ரவிந்து குணசேகர பெற்றிருக்கின்றார்.
இதனிடையே, அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற சுழல்பந்து வீச்சாளரான அமில அபொன்சோ, தென் பிராந்திய அணியான அட்லான்டா பையர் அணியினை பிரதிநிதித்துவம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர இலங்கையை சேர்ந்த ஏனைய கிரிக்கெட் வீரர்களான இசுரு குருவிட்டகே மற்றும் ரோய் சில்வா ஆகியோர் தென் பிராந்தியத்தின் ஏனைய அணியான FT. லோடர்டேல் லயன்ஸ் அணிக்காகவும், கயான் பெர்னாண்டோ மற்றும் பீட்டர் விட்டாச்சி ஆகியோர் சோக்கல் லேசிங்க் அணிக்காகவும் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.