January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரொனால்டோவின் செயலால் கோகோ- கோலா நிறுவனத்துக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிழப்பு

கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ கோலாவுக்குப் பதில் தண்ணீர் குடிக்க வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது அந்த நிறுவனத்துக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவைச் சேர்ந்த 16 அணிகள் பங்குபற்றும் யூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஹங்கேரி அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு போர்த்துக்கல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

சுமார் 60 ஆண்டுகளாக கோகோ – கோலா நிறுவனம் யூரோ கால்பந்து போட்டியின் அதிகாரபூர்வ விளம்பரதார நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.

எனவே, கோகோ கோலா நிறுவனமும் ஒரு அனுசரணையாளர் என்ற அடிப்படையில் செய்தியாளர் சந்திப்பு மேசையில் இரண்டு கோகோ கோலா குளிர்பான போத்தல்கள் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்புக்கு வந்த ரொனால்டோ தன் முன் இருந்த கோகோ கோலா குளிர்பான போத்தல்களை ஓரமாக நகர்த்திவிட்டு தண்ணீர் போத்தலை மேலே உயர்த்திக் காண்பித்து கோகோ கோலாவுக்குப் பதிலாக தண்ணீரை குடிக்குமாறு சைகையில் குறிப்பிட்டார். ரொனால்டோவின் இந்தச் செயல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோகோ கோலா குளிர்பானத்தை உலகின் பிரபல கால்பந்து வீரர் ஒருவர் அகற்றியதால், இது அந்த குளிர்பான நிறுவனத்திற்கு எதிரான விளம்பரமாக உருவெடுத்தது.

அதுமாத்திரமன்றி, ரொனால்டோவின் இந்த சிறிய சைகையினால் செய்தியாளர் சந்திப்பு நிறைவடைவதற்குள் கோகோ கோலாவின் பங்குத் தொகை 1.6 சதவீதம் சரிவை சந்தித்தது.

மேலும், கோகோ கோலாவின் சந்தை மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிழப்பைச் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய மதிப்பில் 29,337 கோடி (இலங்கை மதிப்பில் சுமார் 79,000 கோடி ) ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 242 பில்லியனாக இருந்த கோகோ கோலாவின் மொத்த பங்கு மதிப்பு, 238 பில்லியனாக சரிந்துள்ளது.

யூரோ கிண்ண கால்பந்து தொடருக்கான பிரதான அனுசரணையாளர்களில் ஒன்றான கோகோ கோலா, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இந்த செயலுக்காக இதுவரை சட்ட ரீதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.