July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டி: நியூசிலாந்து, இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!

கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நியூசிலாந்து, இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூன் 18 முதல் 22 ஆம் திகதிவரை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் முறையாக இத்தொடர் நடைபெறவுள்ளதால், இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல்  அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள நியூசிலாந்து அணியில் சுழல்பந்து வீச்சாளர் மிச்செல் சென்ட்னருக்குப் பதிலாக இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ் பட்டேலை நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முகாமைத்துவம் தெரிவு செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் காயத்தில் இருந்து குணமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக எஜ்பெஸ்டன் டெஸ்ட் போட்டியில் திறமையாக பந்து வீசியதன் காரணமாகவே அஜாஸ் பட்டேல் இறுதி 15 வீரர்கள் பட்டியிலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

உபாதை காரணமாக இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த விக்கெட் காப்பாளர் ப்றெட் வொட்லிங் குழாத்தில் இடம்பெறுவதுடன், பதில் விக்கெட் காப்பாளராக டொம் பிளண்டெலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, விராத் கோஹ்லி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி விபரம் வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு விக்கெட் காப்பாளர்கள், 2 சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி, இறுதி போட்டிக்கான இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்படவில்லை.

இதேபோல புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோரின் பெயர் வழக்கம்போல அணியில் இடம்பெற்றுள்ளது.

விக்கெட் காப்பாளர்களாக ரிஷாப் பாண்ட் மற்றும் விருதிமான் சஹாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரின் பெயரும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் சர்மா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

 

நியூஸிலாந்து அணி விபரம்:

கேன் வில்லியம்சன் (தலைவர்), டொம் லெதம், டெவன் கொன்வே, ரொஸ் டெய்லர், ஹென்றி நிக்கல்ஸ், வில் யங், ப்றெட் வொட்லிங், டொம் பிளண்டெல், கொலின் டி க்ராண்ட்ஹோம், கய்ல் ஜெமிசன், டிம் சௌதீ. நீல் வெக்னர், அஜாஸ் பட்டேல், ட்ரென்ட் போல்ட், மெட் ஹென்றி.

இந்திய அணி விபரம்:

விராத் கோஹ்லி (தலைவர்), அஜிங்கியா ரஹானே (உப தலைவர்), ரோகித் சர்மா, சுப்மன் கில்,  செட்டீஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பாண்ட், விருதிமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் மொஹமட் சிராஜ்.