Photo:ICC
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
அதன்படி, இறுதிப் போட்டியில் வெற்றி பெறப் போகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை பணப் பெறுமதியில் கிட்டத்தட்ட 31 கோடி ரூபா) பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
அத்துடன், இறுதிப் போட்டியில் தோல்வியுறும் அணிக்கு இலங்கை பணப் பெறுமதியில் 15 கோடி ரூபா பணப்பரிசு வழங்கப்படும்.
இந்த டெஸ்ட் போட்டி வெற்றி -தோல்வியின்றி முடிவடைந்தால் பணப்பரிசு சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெற்றியாளராக தேர்வாகும் அணிக்கு ஐ.சி.சி.யின் சம்பியன்ஷிப் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 9 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலரும், நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 3 இலட்சத்து 50 அமெரிக்க டொலர் பரிசு தொகையும் வழங்கப்படவுள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.
அத்துடன், ஐந்தாவது இடத்தைப் பெறும் அணிக்கு 2 இலட்சம் அமெரிக்க டொலரும், ஏனைய அணிகளுக்கு தலா ஒரு இலட்சம் அமெரிக்க டொலரும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஐ.சி.சியின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.