January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தொடர்: மும்பையில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் இந்திய அணி வீரர்கள்

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் இன்று (14) முதல் இரண்டு வாரங்களுக்கு மும்பையில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு செல்லவுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் இன்று (14)முதல் இரண்டு வாரங்களுக்கு மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

இதன்படி, மும்பைக்கு வரும் முன்பு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, இந்திய அணியினர் தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கும் காலங்களில் அவர்களுக்கு மூன்று முறை பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதன்படி, இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலை மேற்கொண்ட பிறகு இந்திய அணி ஜூன் 28 ஆம் திகதி இலங்கைக்கு புறப்பட்டு செல்லவுள்ளது.

அங்கு ஹோட்டலில் மேலும் மூன்று நாட்களுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு பி.சி.ஆர் மேற்கொண்டு பயிற்சியை தொடங்குவார்கள்.

இதனிடையே, இலங்கை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, ஒரு டி-20, இரண்டு ஒருநாள் போட்டிகள் என மூன்று பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதில் ஷிகர் தவான் தலைமையிலான ஒரு அணியும், புவனேஸ்வர் குமார் வழிநடத்தும் மற்றொரு அணியும் மோதுகின்றன.

இந்தியா – இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 13 ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 18 ஆம் திகதி நிறைவு பெறுகிறது.

அதனை தொடர்ந்து டி-20 தொடர் ஜூலை 21 ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 25 ஆம் திகதி நிறைவு பெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளன.