October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையுடனான சர்வதேச டி 20 தொடர்: இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

Photo: Sri Lanka Cricket

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது.

இதில் முதலாவது டி-20 போட்டி ஜூன் 23 ஆம் திகதியும், 2 ஆவது போட்டி ஜூன் 24ஆம் திகதியும் கார்டிபில் நடைபெறவுள்ளது. 3 ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி சவுத்தாம்ப்டனில் ஜூன் 26 ஆம் திகதி நடைபெறும்.

இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி வீரர்கள் கடந்த 8 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதுடன், தற்போது 14 நாள் தனிமைப்படுத்தில் உள்ளார்கள்.

இதனிடையே, இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்கான ஒய்ன் மோர்கன் தலைமையிலான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து டி-20 குழாத்தில் 6 வருடங்களுக்கு பிறகு சகலதுறை வீரர் கிறிஸ் வோக்ஸ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

32 வயதான கிறிஸ் வோக்ஸ் கடைசியாக 2015 ஆம் ஆண்டிலேயே இங்கிலாந்து டி-20 அணியில் இடம்பெற்றிருந்தார்.

அத்துடன், இரண்டு வருடங்களின் பின்னர் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லியும், லியாம் டோசனும் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் இலங்கை அணியுடனான டி-20 தொடரிலும் இடம்பெறவில்லை.

இங்கிலாந்து டி-20 குழாம் விபரம்:

ஒய்ன் மோர்கன் (தலைவர்), மொயீன் அலி, ஜொனி பெயார்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், சாம் கரன், டொன் கரன், லியாம் டோசன், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், ஆதில் ரஷீத், ஜேசன் ரோய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.