July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குமார் சங்கக்காரவுக்கு ‘ஹோல் ஒப் பேம்’ விருதை வழங்கி கௌரவித்தது ஐ.சி.சி!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் கௌரவமான ‘ஹோல் ஒப் பேம்’ (Hall Of Fame) விருதுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக 2009 முதல் ஆண்டுதோறும் ‘ஹோல் ஒப் பேம்’ விருதுகளை வழங்கிவருகிறது.

இதனிடையே, ஐ.சி.சியின் முதலாவது உலக டெஸ்ட் சம்பியன் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் 18ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதனை முன்னிட்டு இந்தாண்டுக்கான ஹோல் ஒப் பேம் விருதை 10 வீரர்களுக்கு வழங்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் ஆரம்பகால கிரிக்கெட் (1918 க்கு முன்), உலகப் போர் (1918–1945), உலகப் போருக்குப் பின் (1946–1970), ஒருநாள் போட்டி காலம் (1971–1995), நவீன கிரிக்கெட் (1996–2016) என ஐந்து பிரிவுகளின் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

அதில் 1996-2016 காலப்பகுதிக்கான ஹோல் ஒப் பேம் விருதுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார மற்றும் சிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் அண்டி பிளெவர் ஆகிய இருவரதும் பெயர்கள உள்வாங்கப்பட்டுள்ளது.

இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார 12,400 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 38 சதங்களும், 11 இரட்டைச் சதங்களும், 52 அரைச் சதங்களும் அடங்கும்.

அதேபோல, 404 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 14,234 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 25 சதங்களும், 93 அரைச் சதங்களும் அடங்கும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பின்னர், இந்த கௌரவத்தை பெறும் இரண்டாவது இலங்கை வீரர் இவராவார். முரளிதரனுக்கு 2016ஆம் ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டது.

இதனிடையே, ஆரம்பகால கிரிக்கெட் (1918 க்கு முன்) பிரிவின் கீழ் தென்னாப்பிரிக்காவின் ஆப்ரி பல்க்னர் மற்றும் அவுஸ்திரேலியாவின் மான்டி நோபல் ஆகிய இருவரினதும் பெயர்கள் ஹோல் ஒப் பேம் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல, 1918–1945 காலப்பகுதிக்கான விருதுக்கு மேற்கிந்திய தீவுகளின் லியரி கான்ஸ்டன்டைன் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஸ்டான் மெக்கேப் ஆகியோரது பெயர்களும், 1946–1970 காலப்பகுதிக்கான விருதுக்கு இங்கிலாந்தின் டெட் டெக்ஸ்டர் மற்றும் இந்தியாவின் வினு மங்கட் ஆகியோரது பெயர்களும், 1971–1995 காலப்பகுதிக்கான விருதுக்கு மேற்கிந்திய தீவுகளின் டெஸ்மண்ட் ஹேன்ஸ் மற்றும் இங்கிலாந்தின் பொப் வில்லிஸ்ஆகியோரது பெயர்களும் உள்வாங்கப்பபட்டுள்ளது.

இதன்படி, ஐ.சி.சியின் ஹோல் ஒப் பேம் விருதுக்கு இதுவரையில் 103 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.