November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இனவெறி டுவிட்டர் பதிவுகளால் சர்ச்சையில் சிக்கியுள்ள இங்கிலாந்து வீரர்கள்!

இனவெறியை தூண்டும் வகையில் டுவிட்டர் பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஒல்லி ரொபின்சனை அந்நாட்டு கிரிக்கெட் சபை இடைநீக்கம் செய்திருந்த நிலையில், அந்த அணியின தலைவர் இயென் மோர்கன், ஜோஸ் பட்லர் மற்றும் ஜேம்ஸ் அண்டர்சன் மீதும் தற்போது இனவெறி புகார்கள் எழுந்துள்ளன.

நியூசிலாந்துக்கு எதிராக அண்மையில் நிறைவுக்கு வந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான  வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ரொபின்சன் தனது இளம் வயதில் 2013 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பதிவிட்ட கறுப்பினத்தவர்கள், ஆசிய மக்கள், முஸ்லிம்கள், பெண்கள் எனப் பலதரப்பட்ட மக்களையும் கேலி செய்து அவர் பதிவிட்டிருந்த டுவிட்டர் பதிவுகள் பற்றிய சர்ச்சை எழுந்தது.

அவரது டுவிட்டர் பதிவுகளில் காணப்பட்ட இனவெறி, பாலினப் பாகுபாடு ஆகியவற்றை காரணம் காட்டி, அவரை ஒட்டுமொத்தமாக எல்லாவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை இடைநீக்கம் செய்தது.

இதற்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் விமர்சனங்களை இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் மீது முன்வைத்தனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த ஒருநாள் அணித் தலைவர் இயென் மோர்கன் மற்றும் உப தலைவர் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் 2018 ஆம் ஆண்டு பதிவிட்ட டுவிட்டர் பதிவுகள் இனவெறியை தூண்டும் வகையில் உள்ளதாக புகார்கள் முன்வைக்கப்பட்டன.

அதில் ஆசிய மக்கள் பேசும் ஆங்கில நடையை கேலி செய்யும் விதமாகவும், இழிவுபடுத்தும் விதமாகவும் அவர்கள் இருவரும் உரையாடியதை பலர் மேற்கோளிட்டு புகார் எழுப்பினர்.

அவர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய போது, இந்தியர்கள் ஆங்கிலம் பேசும் விதத்தை கேலி செய்யும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டு உரையாடியுள்ளனர்.

அதாவது, ‘Sir’ என்ற வார்த்தையை வேண்டுமென்றே இந்தியர்களின் ஆங்கில புலமையை கேலி செய்வதற்காக அடிக்கடி பயன்படுத்தியது சர்ச்சையாக எழுந்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை இருவரிடமும் விசாரணையை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க, சக வீரர் ஸ்டூவர்ட் ப்ரோட்டை ஆபாசமாக கலாய்த்து டுவிட்டர் பதிவொன்றை செய்த ஜேம்ஸ் அண்டர்சனும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். எனினும், தற்போது அந்த டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு ஜோஸ் பட்லர் அனுப்பிய பழைய டுவிட்டர் பதிவு, பிரெண்டன் மெக்கல்லமுடனான இயென் மோர்கனின் டுவிட்டர் உரையாடல் என இன்னும் சில டுவிட்டர் பதிவுகளையும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை விசாரணை செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.