February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மும்பையின் வெற்றிப்பயணம் தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை

Photo:BCCI/IPL

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்றைய ஆட்டத்தில் விளையாடுகின்றன.

இந்த ஆட்டம் அபுதாபியில் நடைபெறவுள்ளது. இவ்வருடத் தொடரைப் பொறுத்தவரை நடப்பு சாம்பியனாகக் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் அதன் பிறகு சகல ஆட்டங்களிலும் ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளது.

பெங்களுர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்த மும்பை அணி கடைசியாகப் பங்கேற்ற நான்கு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் இருக்கிறது.

அந்த வெற்றிப் பயணம் இன்றும் தொடர்வதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

அணித்தலைவர் ரோஹித் சர்மா, குவின்டன் டி கொக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, குர்னல் பாண்ட்யா என நட்சத்திர துடுப்பாட்ட பட்டாளமே அணியின் வெற்றிக்கு மிகுந்த உந்துசக்தி அளித்துவருகிறது.

போதாக்குறைக்கு பின்வரிசையில் அதிரடி காட்டுவதற்கு கிரான் பொலார்ட் வேறு இருக்கிறார்.

ஜஸ்பிரிட் பும்ரா, ட்ரன் பௌல்ட், ஜேம்ஸ் பெட்டின்சன் ஆகியோரும் சுழல்பந்தில் மிரட்ட ராகுல் சகாரும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் ஹர்திக் பாண்ட்யா, கிரான் பொலார்ட் ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்தக் கூடியவர்கள் என்பதால் சகல துறைகளிலும் பலம் பொருந்திய அணியாகவே மும்பை கூட்டணி காணப்படுகிறது.

Photo:BCCI/IPL

மறுபக்கம் அணித்தலைவர் தினேஸ் கார்த்திக், சுப்மன் கில், நித்திஷ் ராணா, இயோர்ன் மோர்கன் என எந்தவொரு பந்துவீச்சையும் அடித்தாடக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆட்டம் ஏனோ மந்தமாகவே உள்ளது.

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டங்களில் பிரகாசித்தார்களே ஒழிய சிறந்த இணைப்பாட்டமோ அல்லது கூட்டு முயற்சியோ இல்லாமலிருப்பது அணியின் பலவீனமாக உள்ளது.

அதிரடி வீரரான ஆன்ட்ரே ரஸலும் அவ்வப்போது ஓட்டங்களை பெற்றதைத் தவிர பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை.

இதனால் சிறந்த இணைப்பாட்டத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை கொல்கத்தா அணிக்கு ஏற்பட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சாளரான பெட் கமின்ஸ் எதிர்பார்த்தளவு இதுவரை திறமையை வெளிப்படுத்தவில்லை.

சுழல் பந்துவீச்சளாரன சுனில் நரைனின் பந்துவீச்சுப் பாணியில் மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளதால் அவரும் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறமாட்டார். இது கொல்கத்தா அணிக்கு கூடுதல் நெருக்கடியாக உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் உள்ளது.

முதல் கட்டத்தில் மும்பையிடம் தோல்வியடைந்ததால் கொல்கத்தா அணி இன்று சற்று சுதாகரித்துக்கொண்டு விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் இவ்விரண்டு அணிகளும் 26 ஆட்டங்களில் மோதியுள்ளதுடன் அவற்றில் மும்பை அணி 20 வெற்றிகளையும், கோல்கத்தா அணி 6 வெற்றிகளையும் பெற்றுள்ளன.