தென் கொரியாவுடன் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் கால்பந்து போட்டியில் இலங்கை அணி 5க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
சோல் நகரின் கோயாங் விளையாட்டரங்கில் நேற்று (09) நடைபெற்ற கத்தார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான ஆசிய வலய H குழு 2ஆம் சுற்று தகுதிகாண் போட்டியில் பலமிக்க தென் கொரியாவை இலங்கை அணி எதிர்கொண்டது.
போட்டியின் ஆரம்பம் முதலே எதிர்த்தாடும் வியூகங்களுடன் விளையாடிய தென் கொரிய அணி போட்டியின் முதல் பாதி ஆட்டம் நிறைவடையும் போது 3 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் 52 ஆவது மற்றும் 76 ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை தென் கொரிய வீரர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தென் கொரியா மேலும் கோல் போடுவதற்கு முயற்சித்த போதிலும் அவை கைகூடாமல் போக இறுதியில் 5 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
20 மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற முதலாம் கட்டப் போட்டியில் தென் கொரியாவிடம் 8க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தென் கொரியா இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள், 1 வெற்றி-தோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன் 13 புள்ளிகளைப் பெற்று H குழுவில் முதலிடத்தில் இருக்கின்றது.
அத்துடன், H குழுவில் இதுவரை விளையாடிய போட்டிகளில் தென் கொரியா மொத்தம் 20 கோல்களைப் போட்டுள்ளதுடன், அதற்கு எதிராக எந்த அணியும் கோல் போடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தென் கொரியா தனது கடைசிப் போட்டியில் லெபனானை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்த்தாடவுள்ளது.
இதேவேளை, H குழுவில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்று 2022 உலகக் கிண்ணம் மற்றும் 2023 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான அடுத்த சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை இழந்தது.