July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு அமில அபோன்சு தீர்மானம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரான அமில அபோன்சு, அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

இதன்படி, அமெரிக்காவுக்கு தனது மனைவியுடன் குடிபெயர்வதற்கு தீர்மானித்துள்ள அவர், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இலங்கையின் முன்னணி கழகங்களில் ஒன்றான ராகம கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் தலைவராக செயல்பட்ட 27 வயதான அமில அபோன்சு, அமெரிக்காவின் அட்லன்டா கழக வீரராகவும், பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியில் போதியளவு வாய்ப்பு கிடைக்காமை அவரது ஓய்வுக்கு காரணம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு ஒருநாள் அறிமுகத்தையும், 2018 இல் டி-20 அறிமுகத்தையும் பெற்றுக்கொண்ட அவர், இலங்கை சார்பாக 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அத்துடன், அமில அபோன்சு இறுதியாக 2018 இல் கொழும்பில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டி-20 போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி, இலங்கை 15, 17, 19, 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்காக விளையாடிய அவர், இலங்கை வளர்ந்துவரும் மற்றும் இலங்கை ஏ கிரிக்கெட் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு சகலதுறை வீரரான ஷெஹான் ஜயசூரியவும் கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று அமெரிக்காவுக்கு சென்றதுடன், தற்போது அங்குள்ள கழகத்துக்காக விளையாடி வருகின்றார்.