
இந்த ஆண்டுக்கான டி-20 உலகக் கிண்ணத்தினை இலங்கையில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை, இந்திய கிரிக்கெட் சபை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐ.சி.சி இன் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
எனினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டி-20 உலகக் கிண்ணத்தை இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் பிசிசிஐ போட்டியை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையில் டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன்னர் ஐ.பி.எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதில் ஐ.பி.எல் மற்றும் டி-20 உலகக் கிண்ணம் ஆகியவற்றிற்கு இடையில் நான்கு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.
ஐ.சி.சி இன் விதிமுறைகளின் படி உலகக் கிண்ணப் போட்டிக்காக ஐ.சி.சி யிடம் மைதானத்தை 15 நாட்களுக்கு முன் ஒப்படைக்க வேண்டும். இதனால் ஐ.பி.எல் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்.
மேலும், ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய மூன்று மைதானங்களே உள்ளன. எனவே, ஐ.பி.எல் தொடருக்காக தொடர்ச்சியாக ஆடுகளங்கள் பயன்படுத்துவதால் தொய்வடைந்துவிடும். இது உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுகின்ற அணிகளுக்கு பின்னடைவை கொடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு டி-20 உலகக் கிண்ணப் போட்டியை இலங்கையில் நடத்தலாமா? என்ற திட்டத்தில் பிசிசிஐ உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் இலங்கையில் டி-20 உலகக் கிண்ணத் தொடரை நடத்தினால், மைதானத்தை ஒப்படைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறாயினும், எதிர்வரும் 28 ஆம் திகதி டி-20 உலகக் கிண்ணத்தை இந்தியாவில் நடத்த முடியுமா? அல்லது வேறொரு நாட்டில் நடத்துவதா? என்பது குறித்து பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்க வேண்டும்.