November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2013 இல் செய்த டுவிட்டர் பதிவு: சர்வதேச போட்டிகளில் விளையாட இங்கிலாந்து வீரர் ஒல்லி ரொபின்சனுக்கு தடை!

Photo: England Cricket Facebook

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ரொபின்சன் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து – நியூசிலாந்து இடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ரொபின்சன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். அதேபோல, துடுப்பாட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் பவுன்சர் பந்துகளை சிறப்பாக வீசி ஒல்லி ரொபின்சன் இங்கிலாந்து ரசிகர்களை வியக்க வைத்தார். இதனால், இணையத்தில் ரொபின்சன் குறித்த பேச்சுக்கள் அதிகரித்தன.

அதேபோல, இங்கிலாந்து அணியின் எதிர்கால நட்சத்திர வீரர் என புகழ்ந்து தள்ளினர். ஆனால் அந்த புகழ்ச்சிகள் போட்டியின் முதல் நாள் மாலை வரை கூட நிலைக்கவில்லை. இதற்கு காரணம் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட டுவிட்டர் பதிவு தான் என தெரியவந்தது.

இதில் 2013 இல் சில டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்த ரொபின்சன், அதில் இனவெறியை தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளை பதிவு செய்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ரொபின்சனை இங்கிலாந்து அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.

இதனால் பதறிப்போன ரொபின்சன், உடனே பத்திரிகையாளர்களை சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், என்னை அறியாத வயதில் அதுபோன்ற டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு விட்டேன். அதற்கு இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அப்படி டுவிட் செய்ததற்கு வெட்கப்படுகிறேன். நான் இனவெறியனும் அல்ல, செக்ஸ் வெறியனும் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

இதனை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவசர அவசரமாக நடைபெற்ற இங்கிலாந்து நிர்வாகிகள் கூட்டத்தில், ரொபின்சன் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன்போது ரொபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அவரது இந்த டுவிட்டர் பதிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது.

அதன்படி அவர் டுவிட்டர் பதிவு போட்டுள்ளது உறுதியாகி உள்ளதால் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்தும், இங்கிலாந்து அணியிலிருந்தும் ரொபின்சன் உடனடியாக நீக்கப்பட்டார்.

அதேபோல,இங்கிலாந்து கிரிக்கெட் சபை இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிறகு அவரை சசெக்ஸ் கவுண்டி அணிக்கு  திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.

எது எவ்வாறாயினும், ரொபின்சனுக்கு எதிராக இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதால், அவருக்கு எதிர்வரும் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்படும் என கூறப்படுகிறது.