வீரர்களுக்கான புதிய ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் இடையில் தற்காலிக இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இங்கிலாந்து தொடருக்கான ஒப்பந்தத்தில் மாத்திரம் கையெழுத்திடுவதற்கு இலங்கை வீரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 24 பேர் கொண்ட இலங்கை அணி, நாளை (08) இரவு இங்கிலாந்து நோக்கி புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 24 கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது.
எனவே, புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடற் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய நடைமுறைக்கு குசல் பெரேரா உள்ளிட்ட 24 வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து 38 வீரர்கள் கூட்டாக இணைந்து புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம் என அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
அந்த அறிக்கையில், வீரர்களுக்கு புள்ளிகள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதனால் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, வீரர்கள் நேற்றைய தினத்துக்குள் வருடாந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும், இல்லையெனில் இங்கிலாந்து தொடருக்கான ஒப்பந்தத்தில் மாத்திரம் கையெழுத்திட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை உறுதியாக தெரிவித்தது.
எனினும், வீரர்கள் ஒப்பந்தத்தில் கையழுத்திட மறுத்திருந்தனர். எனவே, இன்றைய (07) தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், இன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் தங்களுடைய முடிவுகளை அறிவிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால், இன்று காலை இலங்கை வீரர்கள் தங்கியிருந்த கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கிரிக்கெட் அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகின.
அதேநேரம், வீரர்கள் அனைவரும் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாவிட்டால் அவர்கள் 3 வருடங்களுக்கு தடைக்குள்ளாவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதுடன், வீரர்கள் ஹோட்டலிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளனர்.
ஆனால், ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு வீரர்களுக்கு இன்று மாலை வரை அவகாசம் வழங்கப்பட்டது.
எனவே, இங்கிலாந்து தொடர் நடைபெறுமா? அல்லது இலங்கை கிரிக்கெட் சபை வேறு தீர்மானங்களை அறிவிக்குமா? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், கிரிக்கெட் அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தற்காலிக இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இதன்படி, இங்கிலாந்து தொடருக்கு செல்வதற்கான ஒப்பந்தத்தில் மாத்திரம் கையெழுத்திடுவதற்கு இலங்கை வீரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை வீரர்கள் வருடாந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதன்படி, இங்கிலாந்து தொடர் நிறைவடைந்த பின்னர், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் வீரர்கள் இணைந்து ஒப்பந்தம் தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எடுப்பார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.இந்த தொடர் எதிர்வரும் 23 ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.