January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்;இந்திய அணியின் வர்ணனையாளராகிறார் தினேஷ் கார்த்திக்!

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியாற்றவுள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18ஆம் திகதி தொடங்கவுள்ளது.

அதன்பிறகு இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்துக்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியை ஒளிபரப்பும் Sky Sports  தொலைக்காட்சியின் வர்ணனையாளராக தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வாகி உள்ளார்.

இது குறித்து ‘தி ஹிந்து’வுக்கு பேட்டியளித்துள்ள அவர், வர்ணனையாளராகும் வாய்ப்பு தானாக கிடைத்தது அதிஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். என்னால் வர்ணனையின்போது கிரிக்கெட் குறித்த தொழில்நுட்பம் மற்றும் திட்டங்கள் குறித்து பேச முடியும்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளின் வீரர்களுடன் உள்ள அனுபவம் அதற்கு உதவும் என நினைக்கிறேன். அதனால் இரு அணி வீரர்களின் மனநிலையை என்னால் கணிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இந்திய அணிக்காக விளையாடும் ஆசை இன்னமும் இருக்கிறது. டி-20 மற்றும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் நான் இன்னமும் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

இப்போதுள்ள இந்திய அணிக்கு தேர்வாக வேண்டுமென்றால் வயது முக்கியமல்ல. நல்ல உடற்தகுதியுடன் இருந்தாலே போதுமானது. ஏனென்றால் இது புதிய இந்தியாவின் காலகட்டத்தில் இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தினேஷ் கார்த்திக், முன்னாள் பிரபல வீரரும், வர்ணனை செய்வதில் கில்லாடியுமான சுனில் கவாஸ்கருடன் இணைந்து இந்த போட்டியில் வர்ணனை செய்கிறார்.

இந்த நிலையில், வர்ணனையாளராக அறிமுகமாகும் தினேஷ் கார்த்திக்குக்கு சுனில் கவாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நிறைவடைந்த பிறகு ஆரம்பமாகவுள்ள தி ஹண்ரெட் கிரிக்கெட் தொடரிலும் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகச் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.