இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்கான 24 பேர் கொண்ட இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான இலங்கையின் உத்தேச அணி குழாம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து தொடரில் பங்கேற்கவுள்ள 24 வீரர்கள் கொண்ட அணி விபரத்தை தேர்வுக் குழுவினர் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள இருவகை போட்டிகளுக்கும் இலங்கை அணியின் தலைவராக குசல் ஜனித் பெரேரா பெயரிடப்பட்டுள்ளார்.
இதன்படி, அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணியை வழிநடத்திய குசல் பெரேரா, தசுன் ஷானகவுக்குப் பதிலாக டி-20 அணியின் தலைவராகவும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டி-20 தொடரை காயம் காரணமாக தவறவிட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ மீண்டும் இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.
இதனிடையே, டெஸ்ட் போட்டிகளில் அண்மைக் காலமாக விளையாடி வந்த ஓசத பெர்னாண்டோ மீண்டும் இலங்கை டி-20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இறுதியாக கடந்த 2020 ஜனவரியில் இந்தியாவுடனான டி-20 போட்டியில் அவர் விளையாடியிருந்தார்.
இந்த நிலையில், பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் போது எலும்பு முறிவு காயத்துக்குள்ளாகிய இளம் வீரரான அஷேன் பண்டார, இங்கிலாந்து தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் இடம்பெறவில்லை.
இதேவேளை, இலங்கை அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப் மீண்டும் இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.
அத்துடன், கடந்த வருடம் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற Boxing Day டெஸ்ட் போட்டியின் பிறகு இலங்கை அணியில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜிதவும் இங்கிலாந்து தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகின்ற மத்திய வரிசை வீரரான சரித் அசலன்க, சகலதுறை வீரரான தனன்ஞய லக்ஷான் மற்றும் இஷான் ஜயரட்ன ஆகிய மூவரும் முதல் தடவையாக இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
எனவே, இலங்கை அணி ஜூன் மாதம் 8 ஆம் திகதி இங்கிலாந்துக்கு பயணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், முதலாவது டி-20 போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி கார்டிப்பில் ஆரம்பமாகவுள்ளது