கத்தார் 2022 உலகக் கிண்ணம், சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான இரண்டாம் சுற்றுக்கான தகுதிகாண் போட்டியில் தென் கொரியாவில் நேற்று (05) நடைபெற்ற லெபனான் அணியுடனான போட்டியில், 2-3 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை அணி போராடி தோற்றது.
உலகக் கிண்ண கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு கத்தாரில் நடைபெற உள்ளது. அதற்காக ஆசிய அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் 2019 இல் தொடங்கியது.
H பிரிவில் இலங்கை, லெபனான், வட கொரியா, தென் கொரியா, துர்க்மேனிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியுடனும் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும்.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு கோல்தானும் போடாமல் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள இலங்கை அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இந்நிலையில் கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு எந்தவொரு போட்டிகளும் நடைபெறவில்லை.
ஏற்கனவே உலக கிண்ணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்ட இலங்கை அணி, தனது 6ஆவது லீக் ஆட்டத்தில் பிபாவின் தரவரிசையில் 93 ஆவது இடத்தில் உள்ள லெபனான் அணியை எதிர்கொண்டது.
தென் கொரியாவின் கோயாங் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் 10ஆவது நிமிடத்தில் இலங்கை வீரர் வசீம் ராஸிக் முதல் கோல் அடித்தார்.
வசீமின் இந்த கோலானது, இந்த சுற்று தொடரிலேயே இலங்கை அணி பெற்ற முதல் கோலாக பதிவானது.
இலங்கை அணி கோல் பெற்ற அடுத்த நிமிடத்தில், லெபனான் அணிக்காக ஜொவான் ஓமரி முதல் கோலைப் போட்டார்.
அடுத்த 6 நிமிடங்களில் சக வீரர் மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை மொஹமத் கதூ ஹெடர் செய்து லெபனான் அணிக்கான அடுத்த கோலையும் பெற்றார்.
எனினும் ஆட்டத்தின் 44 ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் வாய்ப்பின்போது உள்வந்த பந்தை இலங்கை வீரர்கள் தடுக்கத் தவறியமையினால் ஜொவான் ஓமரி பந்தை கோலுக்குள் செலுத்தி லெபனான் அணிக்கான மூன்றாவது கோலையும் பெற்றுக் கொடுத்தார்.
இதன்படி, முதல் பாதி ஆட்டநேர முடிவில் லெபனான் அணி 3க்கு 1 என முன்னிலை பெற்றது.
போட்டியின் இரண்டாம் பாதியின் 62 ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து வசீம் ராஸிக் பந்தை எடுத்துச் செல்லும்போது எதிரணியின் கோல் எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார். இதன்போது கிடைத்த பெனால்டியை வசீம் கோலாக்கி தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.
அதேபோல, முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் இலங்கை வீரர்கள் பின்களத்திலும் சிறப்பாக விளையாடியமையினால் லெபனான் வீரர்களால் எந்தவொரு கோலையும் பெற முடியாமல் போனது.
எனினும், பதில் கோல் திருப்ப ஆட்டத்தின் கடைசி வரை இலங்கை அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணடைந்தன. இறுதியில் லெபனான் அணி 3 க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
இலங்கை தனது கடைசிப் போட்டியில் தென் கொரியாவை இதே மைதானத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.