January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு: சிக்கலில் இங்கிலாந்து தொடர்!

புதிய செயல்திறன் அடிப்படையிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட இலங்கை வீரர்கள் மறுத்துவிட்டதால் இலங்கை கிரிக்கெட் சபை மிகப் பெரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

இலங்கை வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில், கையழுத்திடுவதற்கான கால எல்லை ஜுன் 3 ஆம் திகதிவரை வழங்கப்பட்டிருந்த போதும், ஒப்பந்தம் நியாயமற்றது மற்றும் வெளிப்படையானதல்ல என சுட்டிக்காட்டி வீரர்கள் கையழுத்திட மறுத்து வருகின்றனர்.

இம்முறை ஒப்பந்தத்தில் வீரர்களின் சம்பளம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. அரவிந்த டி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவினால் தயாரிக்கப்பட்ட இப்புதிய ஒப்பந்தம் உண்மையில் வீரர்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும், தங்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் கிரிக்கெட் சபைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

முன்னதாக, இந்த ஒப்பந்தத்தை முன்மொழிந்த கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா, புதிய ஒப்பந்தங்கள் குறித்து புகார் செய்வதை விட வீரர்கள் தங்கள் நாட்டிற்காக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதிய, வீரர்களுக்கான தரப்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை 24 கிரிக்கெட் வீரர்களும் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டார்கள் என கிரிக்கெட் வீரர்களின் பிரதிநிதியான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வீரர்கள் கைச்சாத்திட மாட்டார்கள் என்பதுடன், தொடர்ந்தும் வருகின்ற எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் விளையாட ஒப்புக்கொண்டு, கிரிக்கெட் வீரர்கள் கைச்சாத்திட மாட்டார்கள்.

அதேநேரம் சம்பளமே தரவில்லை என்றாலும் நாட்டிற்காக விளையாடத் தயாராக உள்ளனர் என தெரிவித்த அவர், இங்கிலாந்து தொடருக்கு செல்வர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், வருடாந்த ஒப்பந்தத்தில் கையழுத்திடுவதற்கான கால எல்லை இன்று வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதனிடையே, இங்கிலாந்து தொடருக்காக இலங்கை அணி வீரர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி புறப்பட்டுச் செல்லவுள்ள நிலையில், அந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள 24 வீரர்களுள் எவரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என எழுத்து மூலம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளனர்.

இதனால் இங்கிலாந்து சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.