அவுஸ்திரேலியாவின் மல்க்ரெவ் கிரிக்கெட் கழகத்தின் (Mulgrave Cricket Club) தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
2021/22 ஆம் ஆண்டு பருவகாலத்திற்காக சனத் ஜயசூரியவை பயிற்றுவிப்பாளராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான திலகரட்ன டில்ஷான் மல்க்ரெவ் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல, அண்மையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற இலங்கை அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான உபுல் தரங்கவும் மல்க்ரெவ் கிரிக்கெட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை அதிரடி வீரரான சனத் ஜயசூரியவின் வருகையும் அந்தக் கழகத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கை கொடுத்திருப்பதாக அந்த அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகக் கிண்ண நாயகன் ஒருவரை தாம் பயிற்சியாளராக பெற்றிருப்பது மிகப் பெரிய கௌரவம் எனக் குறிப்பிட்டிருப்பதோடு, சனத் ஜயசூரிய மூலம் தமது அணியின் இளம் மற்றும் சிரேஷ்ட வீரர்களுக்கு மிகப் பெரிய நன்மை கிடைக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் மல்க்ரெவ் கிரிக்கெட் கழகம், அவுஸ்திரேலியாவின் டிவிஷன் – III கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகின்ற ஒரு அணியாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.