October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பட்மின்டன் நட்சத்திரம் நிலூக கருணாரத்ன ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவு!

இலங்கையின் பட்மின்டன் நட்சத்திரம் நிலூக கருணாரத்ன டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

தேசிய ஒலிம்பிக் குழுவினால் எடுத்து கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக வைல்ட் கார்ட் முறையில் நிலூக கருணாரட்னவுக்கு ஒலிம்பிக்கில் பங்குபற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன்படி, இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட ஆறாவது இலங்கை வீரராக இவர் இடம்பிடித்தார்.

அத்துடன், முன்னாள் பட்மின்டன் நட்சத்திரம் நிரோஷன் விஜேகோனுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பட்மின்டன் வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்ட இவர், 2012 லண்டன் ஒலிம்பிக் மற்றும் 2016 றியோ டி ஜெனீரோ ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

இதன்படி, ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது தடவையாக பங்குபற்றுகின்ற வாய்ப்பையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இலங்கை அணியின் தலைவராக செயல்பட்ட நிலூக கருணாரதன, முதல் போட்டியில் உலக பட்மின்டன் தரவரிசையில் 8 ஆம் இலக்கத்தில் இருந்த ஜப்பான் நாட்டு வீரரை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இலங்கையின் முன்னாள் பட்மின்டன் சம்பியனான 36 வயதான நிலூக கருணாரத்ன, 2013 இல் உலக பட்மின்டன் தரவரிசையில் 34 ஆவது இடத்தைப் பெற்று கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எது எவ்வாறாயினும், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கை அணியின் தலைவராக மீண்டும் நிலூக செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தேசிய ஒலிம்பிக் குழு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இதுவரை ஆறு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். குதிரைச் சவாரி வீராங்கனை மெதில்டா கார்ல்சன், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை டெஹானி எகொடவெல, நீச்சல் வீரர் மெத்யூ அபேசிங்க மற்றும் நீச்சல் வீராங்கனை அனிக்காஹ் கபூர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.