July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2024-2031 வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது!

2024 முதல் 2031 வரை நடத்தப்படவுள்ள ஐ.சி.சி இன் ஆடவர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் மற்றும் ஐ.சி.சி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் ஆகிய தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

ஐ.சி.சி இன் நிர்வாகிகள் கூட்டம் நேற்று (01) காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் 2024-2031 வரை நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண தொடர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

2027 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

14 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதவுள்ளன. இரு குழுவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அதனை தொடர்ந்து அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெறும்.

இதற்கு முன் 2003 ஆம் ஆண்டு இதே விதிமுறைகளுடன் உலகக் கிண்ணம் நடத்தப்பட்டது.

இதனிடையே,  ஐ.சி.சி இன் ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2024, 2026, 2028 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் டி-20 உலகக் கிண்ணத் தொடரை நடத்த ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 8 அணிகள் பங்குபற்றும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை 2025, 2029 ஆம் ஆண்டுகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2025, 2027, 2029, 2031 ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 முதல் 2031 வரை நடத்தப்படவுள்ள மகளிருக்கான ஐ.சி.சி உலகக் கிண்ணப் போட்டிகள் மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐ.சி.சி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணையையும் ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.