January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிய குத்துச்சண்டையில் இலங்கை வீராங்கனை நதீக்கா புஷ்பகுமாரி பதக்கம் வென்று சாதனை!

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இலங்கை வீராங்கனை நதீக்கா புஷ்பகுமாரி வெண்கல  பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதன் மூலம் 9 வருடங்களுக்கு பிறகு ஆசிய குத்துச் சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்று கொண்டார்.

முன்னதாக 2012 இல் ஷிரோமி வீரரட்ன வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய குத்துச்சண்டை சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 31 ஆவது ஆசிய குத்துச்சண்டை போட்டி டில்லியில் மே 21 முதல் 31 வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை போட்டி துபாய்க்கு மாற்றப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இறுதி வாய்ப்பாக நடைபெறுகின்ற இந்தப் போட்டியில் 20 ஆசிய நாடுகளை சேர்ந்த 187 வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், இம்முறை ஆசிய குத்துச் சண்டை போட்டியில் இலங்கை சார்பாக 4 வீரர்கள், 3 வீராங்கனைகள் உட்பட ஏழு பேர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (30) நடைபெற்ற பெண்களுக்கான 51 கிலோ கிராம் குறைபார எடைப் பிரிவில் பங்குபற்றிய நதீக்கா புஷ்பகுமாரி, இரண்டு தடவைகள் உலக சம்பியனான கஸகஸ்தான் வீராங்கனை நஸிம் கிஸாய்பேயை அரை இறுதிப் போட்டி ஒன்றில் எதிர்கொண்டார்.

அனுபவ சாலியான கிஸாய்பேயின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட அவர் தோல்வி அடைந்து வெண்கல பதக்கத்தை பெற்று திருப்தி அடைந்தார்.

ஹொரணை தக்ஷிலா கல்லூரியின் பழைய மாணவியான நதீக்கா, இறுதியாக 2019 இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் வெண்கல பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 51 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை நஸீமை இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் எதிர்கொண்டார்.

அனுபவம் வாய்ந்த மேரி கோம் தன்னைவிட 11 வயது குறைவான வீராங்கனையை எதிர்கொண்ட போதிலும், நஸீமே ஆதிக்கம் செலுத்தினார்.

மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் மேரி கோம் கடுமையாக முயற்சித்தும் நஸீமை அவரால் வீழ்த்த முடியவில்லை. இறுதியில் 2-3 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார்.

இதன்மூலம், 6 முறை உலக சம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் ஆசிய குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.