November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷ் அணியின் சுழல் பந்து பயிற்றுவிப்பாளராக ரங்கன ஹேரத்தை நியமிக்க பேச்சுவார்த்தை!

இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷ் அணியின் சுழல் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி, இதற்கு முன்னர் செயற்பட்டு வந்தார்.

இந்த நிலையில், தனக்கும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில், சுழல் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் நியமனம் கிடைத்துள்ளதாக ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, எதிர்வரும் மாதங்களில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடவுள்ளது.

பங்களாதேஷ் அணியின் சுழல் பந்து வீச்சை பலப்படுத்துவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில், இடதுகை சுழல் பந்து வீச்சாளராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாதனையை வைத்துள்ள ரங்கன ஹேரத், கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.

குறித்த காலப்பகுதிக்குள் இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நெறியை முன்னெடுத்த ரங்கன ஹேரத், கடந்த வருடம் தேசிய கிரிக்கெட் பயிற்றுவிப்பு குழாத்தின், சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், இலங்கையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரில் கொழும்பு கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

இதேவேளை, ரங்கன ஹேரத்துடன், பங்களாதேஷ் அணி சுழல் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தானின் சஹீட் அஜ்மால் மற்றும் இந்தியாவின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் சுராஜ் பஹாதுலே ஆகிய இருவரின் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரங்கன ஹேரத்தே, தமது முதன்மை தெரிவாக இருப்பார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.