Photo: BCCI/IPL
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கெபிடெல்ஸ் அணி ஆறாவது வெற்றியைப் பதிவு செய்து முதலிடத்தை தன்வசம் தக்கவைத்துள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்திலும் டெல்லி கெபிடெல்ஸ் அணி வெற்றிபெற்றது.
துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடெல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிருத்திவ் ஷா முதல் ஓவரின் முதல் பந்திலேயே போல்டானார்.
அஜின்கெயா ரஹானே 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டெல்லி அணி 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துக்குள்ளானது.
ஆனாலும், அடுத்து இணைந்த ஷிகர் தவான் மற்றும் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தது. இவர்கள் 55 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள்.
30 பந்துகளில் அரைச் சதமடித்த ஷிகர் தவான் 57 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அலெக்ஸ் கெரே ஆகியோரின் பொறுமையான ஆட்டமும் கைகொடுக்க, டெல்லி கெபிடெல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் ஜொப்ரா ஆச்சர் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜெயதேவ் உனத்கட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சுமாரான இலக்கான 162 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஓட்டங்களைப் பெற்ற போதிலும் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
ஜோஸ் பட்லர், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்திம் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
ஸ்டீவன் ஸ்மித்தின் ஆட்டமிழப்பு ராஜஸ்தான் அணிக்கு பேரிழப்பாக அமைந்தது. பென் ஸ்டோக்ஸ் 41 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் கொடுத்தார்.
40 பந்துகளில் கைவசம் 5 விக்கெட்டுகள் இருக்க 51 ஓட்டங்களே தேவைப்பட்ட போதிலும் மத்திய வரிசை வீரர்கள் சொதப்பலாக ஆடி வெற்றியை தாரைவார்த்தார்கள்.
பெரிதாக சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரொபின் உத்தப்பா அவசியமான நேரத்தில் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சஞ்சு சம்ஸன் 25 ஓட்டங்களுடன் ராஜஸ்தான் ரோயல் அணி தோல்வியடைவது உறுதியானது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களையே பெற முடிந்தது. அதன்படி டெல்லி அணி 13 ஓட்டங்களால் வெற்றிவாகைசூடியது.
முதல் கட்ட சுற்றில் ராஜஸ்தானை 46 ஓட்டங்களால் வீழ்த்திய டெல்லி மீண்டும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வெற்றிகளின் மூலம் டெல்லி கெபிடெல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது. ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் ஏழாமிடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.