January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையை வீழ்த்த இந்திய ‘சி’அணியே போதும் என்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மால்!

இலங்கைக்கு ‘C’ அணியை இந்தியா அனுப்பினாலும் அந்த அணிதான் வெற்றி பெறும் என பாகிஸ்தானின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மால் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா போன்ற மூத்த வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதேவேளையில், ஐ.பி.எல்.லில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு இந்திய அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடவுள்ளது.

இதற்கு ராகுல் திராவிட் பயிற்சியாளராக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அணியில் ஷிகர் தவன், புவனேஷ்வர் குமார், ஹார்திக் பாண்டியா போன்ற சில மூத்த வீரர்கள் மட்டுமே இடம்பிடிப்பார்கள் என கருதப்படுகிறது.

இந்த நிலையில், இத்தொடர் குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மால், இந்தியாவால் ஒரே நேரத்தில் மூன்று அணிகளை சர்வதேச கிரிக்கெட்டில் களமிறக்க முடியும் என புகழ்ந்து பேசினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

இந்தியாவில் கிரிக்கெட் உட்கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. இதற்கு காரணம், அவர்கள் கீழ்மட்டத்திலிருந்தே வீரர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்குகின்றனர்.

இந்திய அணி அடுத்து இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ளது. இதற்கு இளம் வீரர்களை அனுப்பவுள்ளனர். இந்தியாவின் மூன்றாவது அணியை அங்கு அனுப்பினாலும் நிச்சயம் வெற்றிபெறும். அப்படிப்பட்ட பலமான வீரர்களை இந்தியா தன்வசம் வைத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ராகுல் டிராவிட் கிட்டதட்ட 7 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டில் பயிற்சியாளராக உள்ளார். இளம் வீரர்களை இவர் உருவாக்கி அனுப்ப, சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களை ரவி சாஸ்திரி மேலும் மெருகேற்றுகிறார்.

விராத் கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். கோலிக்கு ஒருவேளை ஓய்வு தேவைப்பட்டாலும், தலைவராக செயல்பட அணியில் பலருக்கு தகுதியுள்ளது.இதனால், இந்திய அணிக்கு தற்போது எந்த பிரச்சினையும் இல்லை என கூறினார்.