
ஜூன் மாதம் நடுப்பகுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மறறும் டி-20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இந்த தொடர்களுக்காக, அறிவிக்கப்பட்டிருக்கும் 28 பேர் கொண்ட இலங்கையின் உத்தேச குழாத்தில் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் விளையாடிய இலங்கை அணியின் 18 பேரும் முழுமையாக இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
எனவே, பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கை அணி வீரர்கள் மூன்று நாட்கள் கொண்ட சுயதனிமைப்படுத்தல் காலத்தினை பூர்த்தி செய்த பின், பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
இதேநேரம், பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இடம்பெறாத அணியுடன் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 10 வீரர்களும் கடந்த 29 ஆம் திகதி பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் தமது பயிற்சிகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள இருவகை போட்டிகளுக்கும் இலங்கை அணியின் தலைவராக குசல் ஜனித் பெரேரா செயற்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதேநேரம், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக விளையாடிய சரித் அசலன்க, கமில் மிஷார, சதீர சமரவிக்ரம, தனன்ஞய லக்ஷான் மற்றும் இஷான் ஜயரட்ன உள்ளிட்ட வீரர்கள் இலங்கையின் உத்தேச குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
அதேபோல, அண்மைக்காலமாக உடற்தகுதி பிரச்சினையால் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவும் உத்தேச குழாத்தில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, இலங்கை அணியின் அனுபவமிக்க வேக பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப், கசுன் ராஜித ஆகியோருக்கும் இலங்கையின் உத்தேச குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியில் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த அஞ்சலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமல் மற்றும் சுரங்க லக்மால் போன்ற வீரர்களுக்கு மீண்டும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதில் அஞ்சலோ மெதிவ்ஸ் மாத்திரம் தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னை அணித் தேர்வில் இணைத்து கொள்ள வேண்டாம் என தேர்வாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது.
எனவே, ஜூன் மாத முதல் வாரத்தின் இறுதிப் பகுதியில் இந்த 28 பேர் அடங்கிய இலங்கை அணியில் இருந்து 22 பேர் அடங்கிய குழாம் தெரிவு செய்யப்படவுள்ளது.
இதேவேளை, இலங்கை அணி ஜூன் மாதம் இரண்டாம் வாரமளவில் இங்கிலாந்துக்கு பயணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், முதலாவது டி-20 போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி கார்டிப்பில் ஆரம்பமாகவுள்ளது.