November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை அணியிலிருந்து சிரேஷ்ட வீரர்களை நீக்கியது பொருத்தமான காரியம் அல்ல’; திலகரட்ன டில்ஷான்!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் தருவாயில் இலங்கை அணியிலிருந்து சிரேஷ்ட வீரர்களை நீக்கியது பொருத்தமான காரியம் அல்ல என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், போட்டி வர்ணனையாளருமான ரஸல் ஆர்னோல்ட்டுடன் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் தருவாயில் இலங்கை அணியிலிருந்து சிரேஷ்ட வீரர்களை நீக்கியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்மானம். ஏனெனில் மத்திய வரிசையை பலப்படுத்துவதற்கு அனுபவமிக்க வீரர்கள் அணியில் இருக்க வேண்டும்.

அண்மையில் நிறைவுக்கு வந்த பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் சிரேஷ்ட வீரர்கள் இல்லாமல் விளையாடி நாங்கள் தோல்வியைத் தழுவியிருந்தோம். இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளையும் எடுத்துக்கொண்டால் நாங்கள் 150 ஓட்டங்களையே எடுத்தோம்.

இதற்கு மத்திய வரிசை பலமிக்கதாக இருக்க வேண்டும். அப்போது தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கு வேகமாக ஓட்டங்களை குவிக்க முடியும். அதேபோல, அணிக்குள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால் ஒரே தடவையில் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்காமல் சிரேஷ்ட வீரர்களையும் அணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதனிடையே குறித்த நேர்காணலில் இணைந்து கொண்ட இலங்கை அணியின் மற்றுமொரு முன்னாள் வீரரான சனத் ஜயசூரிய இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்களை இணைத்து கொள்ளாமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

நான் தலைவராக இருந்த போது இவ்வாறானதொரு நிலைமையை சந்தித்தேன். ஆனால் இரண்டு சிரேஷ்ட வீரர்களாவது அணியில் இருந்தார்கள். உண்மையில் நாங்கள் நீண்டகால திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கு இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் எந்தவொரு தவறும் கிடையாது.

உண்மையில் இளம் வீரர்கள் அணியில் இருந்தால் சிரேஷ்ட வீரர்கள் தமது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால் தற்போது இலங்கை அணியில் அப்படி நடக்கின்றதா என்பது பற்றி தெரியாது என அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரை 2- 1 என்ற ஆட்டக்கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியது.

இலங்கை அணியின் இந்த தோல்விக்கு அணியில் சிரேஷ்ட வீரர்களை இடம்பெற செய்யாமை தான் முக்கிய காரணம் என பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.