இலங்கை கடற்படையில் பணியாற்றும் பெண் மாலுமியான தெஹானி எகோடவெல, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் 0.177 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
2011 முதல் கடற்படையின் துப்பாக்கி சுடும் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னணி பெண் வீராங்கனையாக தெஹானி எகோடவெல உள்ளார்.
2012 முதல் இலங்கையின் சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையாக ஏழு முறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு பல வெளிநாட்டு போட்டிகளிலும் இவர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றுள்ளதுடன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
2018 முதல் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் 0.177 போட்டியிலும் 2019 முதல் பெண்கள் ஆல்ரவுண்ட் 50 மீ ரைபிள் 0.22 போட்டியிலும் இலங்கைக்கான சாதனை படைத்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த தெற்காசிய விளையாட்டு மற்றும் 2019 நேபாள விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 50 மீ ரைபிள் 0.22 அணி போட்டியில் வெண்கலப் பதக்கத்தை இவர் வென்றுள்ளார்.
அத்தோடு கத்தாரில் நடைபெற்ற 2019 மகளிர் 50 மீ ரைபிள் 0.22 போட்டியில் இலங்கைக்கான சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இவரின் திறமை காரணமாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 0.177 என்ற மகளிர் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.