2022 கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் மற்றும், 2023 ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை கால்பந்து அணியில் வடக்கைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தென் கொரியாவில் நடைபெறவுள்ள கத்தார் 2022 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தகுதிகாண் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோல்காப்பாளர் சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை அணியின் உதவித் தலைவர்களாக முன்னாள் தலைவர் கவிந்து இஷானும், புதிதாக அஹ்மத் வசீம் ராசீக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 22 வீரர்களை கொண்ட குழாத்தில் வெளிநாடுகளில் விளையாடும் இலங்கை வம்சாவளியினர் மூவர் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் விளையாடிவரும் மேர்வின் ஹெமில்டன், குவீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணி வீரர் டிலொன் டி சில்வா இலங்கை வம்சாவளியினராவர்.
ஜெர்மனியில் பல வருடங்களாக விளையாடி வந்த வசீம் ராஸீக் தற்போது நாடு திரும்பியுள்ளதுடன், அப்பன்ட்றி லயன்ஸ் கழகத்துக்காக விளையாடி வருகின்றார்.
இவர்களில் தற்போது இங்கிலாந்தில் இருக்கும் டிலொன் டி சில்வா, நேரடியாக தென் கொரியா சென்று இலங்கை அணியுடன் இணைந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை கால்பந்து அணிக்காக பல வருடங்களாக விளையாடி வருகின்ற நியூ யங்ஸ் கழக வீரர் டக்சன் பியூஸ்லாஸ் மீண்டும் இலங்கை கால்பந்து அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இவர் மாலைதீவுகளில் தொழில்சார் கால்பந்தாட்ட போட்டிகளில் தற்போது விளையாடி வருகின்றார்.
அதேபோல், றினோன் கழகத்துக்காக விளையாடிவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜுட் சுபனும் இலங்கை குழாத்தில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.
22 வயதான ஜுட் சுபன், யாழ். இளவாலை புனித ஹென்ரிஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.
எனவே, உலகக் கிண்ண ஆசிய வலயத்துக்கான H குழுவில் இடம்பெறும் இலங்கை இதுவரை 5 போட்டிகளில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
இந்தக் குழுவில் இடம்பெற்ற வட கொரியா, கொரோனா தொற்று நோயைக் காரணம் காட்டி விலகிக்கொண்டதால், இலங்கைக்கு இன்னும் இரண்டு போட்டிகளே எஞ்சியுள்ளன.
இதன்படி, லெபனானை ஜூலை 5 ஆம் திகதி சந்திக்கும் இலங்கை, 4 நாட்கள் கழித்து தென் கொரியாவை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.