November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டார் ஷிரான் பெர்னாண்டோ!

இலங்கை அணியுடன் பங்களாதேஷ் சென்றிருந்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஷிரான் பெர்னாண்டோ குணமடைந்தார்.

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் தற்போது பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே, இரண்டு போட்டிகள் நிறைவடைந்து இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க பங்களாதேஷ் அணி தொடரினை 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

இந்த நிலையில் 25 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் தொடர் ஆரம்பமாவதற்கு முன் இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளர் சமிந்த வாஸ், சகலதுறை வீரர் இசுரு உதான மற்றும் இளம் வீரர் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.

இதனால், இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் ரத்தாகும் நிலை ஒன்று உருவானது.

எனினும், பின்னர் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய சமிந்த வாஸ் மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டதால் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், இரண்டாவது தடவையாகவும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஷிரான் பெர்னாண்டோவிற்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், ஷிரான் பெர்னாண்டோவுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டது.

அதேநேரம், ஷிரான் பெர்னாண்டோ கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும்,  மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.