January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலிம்பிக் செல்லும் அனைத்து இலங்கை வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைக் கருத்திற்கொண்டு இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்க இலங்கையிலிருந்து குதிரைச் சவாரி வீராங்கனை மெடில்டா கார்ல்சன் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி ஆகிய இருவரும் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர்.

எனினும், மெய்வல்லுனர், நீச்சல், ஜுடோ உள்ளிட்ட போட்டிகளில் இலங்கை வீரர்கள் சிலர் இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒலிம்பிக் செல்லவுள்ள இலங்கை வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தேசிய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல, டோக்கியோ புறப்பட்டுச் செல்ல முன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விபரங்கள் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டையை வைத்திருப்பவர்களுக்கு மாத்திரம் தான் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினரும், டோக்கியோ ஒலிம்பிக்கின் இலங்கை அணியின் பிரதானியுமான காமினி ஜயசிங்க தெரிவித்தார்.

அதேபோல, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய கொவிட் நடைமுறைகளை ஜப்பானின் கொரோனா தடுப்பு நிலையத்தின் இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஹிமன் த சில்வா மேற்பார்வை செய்யவுள்ளார்.

இதனிடையே, ஒலிம்பிக் போட்டிகளுக்கு புறப்பட்டு செல்ல முன் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், ஜப்பான் சென்றவுடன் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.